துறவறம்
மௌனத்தின் அலைகள்
இராம் மனோகர்
கேள்வி - எனக்கென்னவோ இல்லறம் பெரும் தடையாகவே தோன்றுகிறது. ஆனால், துறவு மேற் கொண்டால் நான் எங்கே செல்வது ?
எல்லாவற்றையும் துறந்தவன் எங்கு வேண்டானாலும் இருப்பான். சௌகர்யங்களையும், வசதி வாய்ப்புகளையும் தேடிக் கொண்டிருக்க மாட்டான். துறவைப் பற்றிய நம் கண்ணோட்டம் தவறானது. நம் முன்னோர்கள் துறவறத்திற்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுத்தார்களோ அதைவிட முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், புனிதமானதாகவும் இல்லறத்தைப் போற்றினார்கள். ஏனென்றால், ஞானத்தை அடைவதோடு சமுதாயத்தை நல்வழிப்படுத்தும் துறவிகளை ஆதரிப்பதோடு தங்கள் இல்லற தர்மத்தையும் சீரோடும், சிறப்போடும் நடத்தி மேன்மையடைபவர்கள் இல்லறத்தார்தான். நம் பாரத தேசத்தின் கலாச்சாரம் மனிதனின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டே அமைந்திருக்கிறது. அது இந்த உலகில் இருந்து இயற்கையாக மனிதன் அடையும் எந்த இன்பத்தையும் வெறுத்து ஒதுக்க வேண்டும் என்று சொல்வதே இல்லை. அந்த இன்பங்களை அதிகமாகப் பெறுவதற்கே வழி வகைகளைக் கற்றுத் தருகிறது.
ஆனால், அந்த இன்ப நுகர்ச்சியே பெருந் துன்பத்திற்கும் காரணமாக அமைந்து விடக் கூடாது என்பதிலும் மிகுந்த கவனமாக இருக்கிறது. அதாவது, படகானது தண்ணீரில் மிதக்கும் வரை இன்பம். அதே படகுக்குள் தண்ணீர் புகுந்தால் விளைவது துன்பம் என்றும் எச்சரிக்கிறது. படகானது எப்படி தண்ணீரில்தான் மிதக்க வேண்டுமோ அதுபோல மனிதனின் வாழ்க்கைப் படகானது ஆசையெனும் தண்ணீரின் மேல்தான் மிதக்கும். ஆனால், அந்த ஆசையே வாழ்க்கையெனும் படகை ஆக்கிமித்து விடுமானால் நிலைமை கவலைக்கிடமாகி விடும். படகுக்கு ஆதாரமாக தண்ணீர் விளங்குவது போல, ஆசைகளை ஆதரமாகக் கொண்டே வாழ்க்கை நகருகிறது. எனவே, அந்த ஆசைகளானது மனித வாழ்வை மேலும் மேலும் உயர்த்துவதோடு, பிறவியின் நோக்கத்தை நிறைவேற்றும் தன்மையுடையவைகளாகவும் இருக்க வேண்டும்.
இந்த வாழ்க்கை நித்தியமானதல்ல என்பதை மனிதன் உணராத போதுதான் மனிதனின் ஆசைகள் பேராசையாக ஆகி விடுகின்றன. நம் வாழ்வைப் பொறுத்த வரை சாஸ்வதமானவைகள் இரண்டே விஷயங்கள்தான். ஒன்று பிறப்பு மற்றொன்று இறப்பு. மற்ற எதுவும் சாஸ்வதமானதல்ல என்பதை உணர்ந்தவர்கள் தேவையற்ற ஆசைகளின் பாற்பட்டு தவறிழைக்க மாட்டார்கள். இத்தகைய உணர்வுடையவர்கள் வாழ்வை நேசிப்பார்களேயன்றி அற்ப சுகங்களுக்கு ஆசைப்பட்டு வாழ்வை இழக்க மாட்டார்கள். படகை மேற்கோள் காட்டியது போல நம் முன்னோர்கள் தாமரை இலையையும் இதற்கு உதாரணமாகச் சொல்கிறார்கள். தாமரை இலைக்கு ஆதரமாக விளங்குவது தண்ணீர்தான் என்றாலும், அந்தத் தண்ணீரைத் தாமரை இலை தன் மீது ஒட்ட விடுவதில்லை. இந்த கோட்பாட்டையே நம் வாழ்வியலுக்கும் முன் வைக்கிறது நம் சனாதான தர்மம்.
இல்லற வாழ்வைப் பொருத்த வரை பற்றும், பாசமும் அவசியமானதாக இருக்கிறது. எனினும் அதிலேயே மூழ்கி மனிதன் தன் வாழ்க்கை நிலையாமையை மறந்து விடக் கூடாது. இத்தகைய ஞானம் உடைய மனிதனே இன்ப துன்பங்களை சமமாகப் பாவிக்கின்ற மனப்பான்மையைப் பெறுவதோடு தேவையற்ற ஆசைகளையும் துறந்து விடுவான். இந்த பழக்கமே அவனுக்கு முதுமையில் மேற்கொள்ளும் துறவறத்திற்கு அடித்தளமாக அமைகிறது. துறவு என்ற நிலை கூடத் தவறாகவே சுட்டிக் காட்டப்படுகிறது. பிழைத்துக் கிடந்தால்தானே துன்பம், வாழ்வையே துறந்து விட்டால் துன்பமெல்லாம் நீங்கி விடுமல்லவா ? என்கிற ரீதியில் சிலர் துறவைப் பற்றி தவறாகப் பொருள் கொள்கிறார்கள். ஒருவன் தலையில் உட்கார்ந்திருக்கும் கொசுவைக் கொல்வதற்காக ஒரு உலக்கையை எடுத்து யாராவது அடிப்பார்களா ? கொசு சாகிறதோ இல்லையோ, அவன் மாண்டு போவான்.
அது போலத் துன்பங்களில் இருந்து விடுபடுவதற்காக வாழ்வையே பாழாக்குவது என்பது அறியாமையே அன்றி வேறென்ன ? பறவையின் இரண்டு சிறகுகளை ஒத்ததே ஆன்மீக வாழ்வில் சிறகடித்துப் பறக்கும் சாதகன் பெற்றிருக்கும் அன்பும், அறிவும். எல்லாவற்றையும் துறந்து அன்பை இழந்து விட்டு நீ எதைப் பெறப் போகிறாய் ? அறிவோடு சிந்தித்துப் பார்த்தால், துறக்க வேண்டியது எதுவெனில், இந்த உலகத்தின் நீ கொண்டுள்ள தவறான எண்ணங்களையே ஆகும். அதன் மூலம் இந்த உலகோடு நீ கொண்டுள்ள இணக்கத்தை உயர்ந்த நோக்கம் உடையதாக மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும். இதுவே துறவு. இதுவே தியாகம். உலகத்தின் சொரூபத்தை உள்ளது உள்ளபடி அறிந்து கொள்ளுதலே தியாகம். எல்லாம் ஈசனுடைய சொரூபமே என்கிற பொழுது இதை விடுத்து எதைப் பற்றப் போகிறாய் ?
இங்கே காணும் யாவும் இறைவன் நமக்களித்த வாய்ப்புகளாகும். இறைவன் கொடுத்த வாய்ப்புகளை விட்டு விட்டால் வேறு வாய்ப்புகள் உனக்கேது சொல் ? நம் மனதின் நிலைக்குத் தக்கவாறே உலகம் நமக்குத் தென்படுகிறது. எனவே நம் மனதை நாம் துறப்போமேயானால் உலகத்தையும் நாம் துறந்தவர்களாவோம். பிறகு எஞ்சி இருப்பது ஈசன் மட்டுமே. எனவே துறக்க வேண்டியது நமக்குள் இருக்கும் மனதையேயன்றி புறத்தே இருக்கும் விஷயங்களையல்ல. மனைவி மக்களை நிர்கதியாக விட்டு விட்டு துறவு கொள்வது கொடிய பாதகச் செயலாகும். பரம்பொருள் ஒன்றே நிலையானது. அதில் லயித்து இருப்பதே ஆனந்தம். பிரபஞ்சம் மாயை, அது நிலையில்லாதது, மாறிக் கொண்டே இருப்பது, அழிவை நோக்கி நம்மை தள்ளுவது என்றெல்லாம் சொல்வதை நாம் தவறாகப் புரிந்து கொள்வதே துறவைப் பற்றிய தவறான கருத்துக்கு வழி வகுத்து விடுகிறது.
உண்மையில் பரம்பொருளைப் பற்றி அறியவோ, அடையவோ ஒருவன் எண்ணுவானேயாகில், அவன் அறிவும், அன்பும் ஒருங்கே அமையப் பெற்றவனாக இருத்தல் வேண்டும். இதில் அன்பின் வலிமை சொல்லில் அடங்காதது. பரம்பொருளின் அருளைப் பெறுவதற்கு அன்பே முதல் காரணமாக அமைகிறது. அறிவே இல்லாத ஒருவனிடத்தில் அன்பு நிறைந்து இருக்குமேயானால், நல்வாழ்வும் பரம்பொருள் கருணையினால் அறிவும் அவனைத் தேடி வந்து அடைகின்றது. அறிவை மட்டும் நிறைய பெற்ற ஒருவன் உள்ளத்தில் அன்பு துளி கூட இல்லை என்றால் ஈரமில்லாத நிலத்தில் முளைத்த செடி போல அவன் வாழ்க்கை பட்டுப் போகும். எனினும் அன்புடையவன் அறிவில்லாதவனாக இருந்து பல நன்மைகளை அடைவதற்கிடையில் பல துன்பங்களை எதிர் கொள்ள வேண்டியதிருக்கும். எனவே அன்பும், அறிவும் ஒருங்கே அமையப் பெற்றிருத்தல் அவசியம். அதுவே அற வாழ்க்கையுமாகும்.
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.

Comments
Post a Comment